தமிழக செய்திகள்

கடந்த ஆட்சியில் ரூ.5 லட்சம் கொடுத்தோம்; இப்போ ஒரு ரூபாய் லஞ்சம் இல்லை- ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பேட்டி

500 பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்திலேயே இயக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறினர்.

ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: விழாக்காலங்களில் கட்டண உயர்வு என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எங்கள் சங்கத்தை சேர்ந்த 500 பேருந்துகள் வருடம் முழுவதும் அரசு பேருந்து கட்டணத்திலேயே இயக்குவதற்கு அனுமதி கோரி விண்ணப்பம் கொடுத்து இருக்கிறோம். 500 பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்திலேயே இயக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம். முடிவு செய்து சொல்வதாக கூறியிருக்கிறார்கள். ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பெர்மிட்டும் சுற்றுலா பேருந்துகளுக்கு பெர்மிட் தனியாகவும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கயை வைத்துள்ளோம். அது பரிசீலனையில் இருப்பதாக கூறியுள்ளார்.

ஒரு ரூபாய் லஞ்சம் இல்லை

சுற்றுலா பேருந்துகளுக்கு அனுமதி கொடுத்தால் சுற்றுலா வளர்ச்சி அடையும். பக்கத்து மாநிலங்களுக்கு தனித்தனி பெர்மிட் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இல்லை அதை சுட்டிக்காட்டியிருக்கிறோம். மற்ற மாநிலங்களில் வரி எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற விவரங்களையும் நாங்கள் கொடுத்து இருக்கிறோம். ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் 40 பேருந்துகளுக்கு பெர்மிட் கிடைத்துள்ளது. இதே பெர்மிட் வாங்க, போன ஆட்சியில் 5 லட்சம் ரூபாய் கொடுத்தோம்.. ஆர்டிஒ அலுவலகத்துல தான் முதல் ஊழலே இருக்கும் ஆனா இப்போ யாருமே லஞ்சம் கேக்குறதே இல்ல.. இந்த மாற்றத்தை நாங்க வரவேற்கிறோம். முன்பு அமைச்சர்களிடம் போய்விட்டுத்தான் வரவேண்டும்.

அதிகாரிகளே பெர்மிட் கொடுக்கிறார்கள்

இப்போது அதிகாரிகளே கொடுக்கிறார்கள். இந்த மாதிரி மாற்றம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது எல்லா வேலைகளும் எந்த லஞ்சமும் இல்லாமல் நடக்கிறது. அதிகாரிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இடைத்தரகர்களுக்கு வேலை நடப்பது இல்லை. இடைத்தரகர்கள் மறுபடியும் பணம் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் யூடியூப் மூலமாக பொய்யான தகவலை சொல்லி இடமாற்றம் செய்ய வைக்கிறார்கள். 40 நாளில் ஒரு போக்குவரத்து கமிஷனரை மாற்றிவிட்டார்கள். ஏன் என்று கேட்டால் பணம் வங்கியதாக சொல்கிறார்கள். அவர் எந்த ஒரு பைசாவும் வாங்கவில்லை.வேலை சரியாக நடந்தது” என்று கூறினர்.