தமிழக செய்திகள்

திமுக கூட்டணியில்தான் தற்போதும் இருக்கிறோம்: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் பேட்டி

த.வெ.க.வுடன் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் இணைவது ஜனநாயக நாட்டில் இயல்பாக நடைபெறும் ஒன்று என்று வீரபாண்டியன் கூறினார்.

சென்னை,

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் சந்தித்திருப்பது மரியாதை நிமித்தமானது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மக்கள் அளித்த தீர்ப்பு குறித்து நாங்கள் பேசினோம். நாங்கள் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியில் சேரவில்லை. அவ்வாறெல்லாம் நாங்கள் முடிவெடுக்க மாட்டோம். அதுபோன்ற சூழல் வரும்போது கட்சியின் கூட்டத்தை கூட்டியே முடிவு செய்வோம். தற்போது நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தான் இருக்கிறோம். அந்த கூட்டணியில் இருந்து தான் நாங்கள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளோம்.

கால அவகாசம்

நாங்கள் இந்தியா கூட்டணில் தான் இருக்கிறோம். இந்தியா கூட்டணி கூட்டத்தில் தி.மு.க. கலந்துகொள்ளாதது அவர்களுடைய விருப்பம். இதேபோல, த.வெ.க.வுடன் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் இணைவது ஜனநாயக நாட்டில் இயல்பாக நடைபெறும் ஒன்று. ஆனால், எது நடந்தாலும் அரசின் அறநெறிகளை மீறிவிடக்கூடாது. த.வெ.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சட்ட ஒழுங்கில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க கூடுதல் நடவடிக்கை தேவை” என்றார்.

ப.சிதம்பரம் சந்திப்பு

முன்னதாக, முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரசின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் சமீபத்தில் முதல் அமைச்சர் விஜயை சந்தித்து பேசினார்.அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகத்தை நேற்று அவர் சந்தித்து சிறிது நேரம் பேசினார்.இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ப. சிதம்பரம் இன்று சந்தித்தார். 20 நிமிடங்கள் இருவரும் பேசினார்கள். சந்திப்புக்குப் பின் வெளியே வந்த ப. சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களும், திருப்பங்களும் ஏற்பட்டு வரும் நிலையில் ப. சிதம்பரம் கம்யூனிஸ்ட் தலைவர்களை திடீரென சந்தித்து வருவதில் அரசியல் காரணம் இருப்பதாகவே கருதப்படுகிறது.