ஈரோடு,
மக்கள் சக்தியால் திமுக, அதிமுக கோட்டையை உடைப்போம் என அமைச்சர் விஜய் பாலாஜி கூறியுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதையொட்டி இரு தொகுதிகளிலும் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசிலடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில், ஈரோட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஜனநாயக முறையில் ஒரு இடைத்தேர்தல் நடந்திருக்கிறது என்றால் இதுவே முதல் முறை; 3-ஆவது இடத்தில் இருந்த நாங்கள் முதல் இடத்திற்கு வந்துள்ளோம். 'பொய் பிரசாரத்தை நம்பி மக்கள் வாக்களித்தார்கள்.
இப்போது மக்கள் அதிமுக, திமுகவைப் புறக்கணித்துவிட்டு, தவெகவை ஏற்றுக்கொண்டார்கள். தாராபுரம் இடைத்தேர்தலில் நகர்ப்புறப் பகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும்போது, அதிமுக, திமுகவின் கோட்டையை மக்கள் சக்தியால் உடைத்து, தவெக முன்னிலை பெறும் என்றார்.