கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஜெயலலிதா ஆட்சியை நாங்கள் அமைப்போம் - சசிகலா பேச்சு

பொருளாதார நிலையை அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றதுதான் திமுக செய்த சாதனை என்று சசிகலா கூறியுள்ளார்.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா தனது கட்சி வேட்பாளரான தனபாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா ஆட்சியை நாங்கள் அமைத்திடுவோம் என உறுதியோடு தெரிவிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் திமுக செய்த சாதனை என்னவென்றால் பொருளாதார நிலையை அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றதுதான். அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் வேறு இடத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டது.

ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்தியது, விலைவாசியை உயர்த்தியது, வீட்டுவரி, சொத்து வரி என்று ஒரு நீண்ட பட்டியலை சொல்லும் அளவிற்கு கட்டணங்களை உயர்த்தி உள்ளனர். இந்த தேர்தலில் மீண்டும் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.

தீயசக்தி வேண்டுமா? ஜெயலலிதாவின் ஆட்சி வேண்டுமா? துரோகத்தின் ஆட்சி வேண்டுமா? தியாகத்தின் ஆட்சி வேண்டுமா? என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் பிரச்சினை உள்ளது. அனைத்து சமூகங்களின் உணர்வுக்கும் மதிப்பளித்து ஒற்றுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT