தமிழக செய்திகள்

‘தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் துணைபோக மாட்டோம்’ - தமிழிசை சவுந்தரராஜன்

சட்டப்படி தொகுதி மறுவரையறை நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக மாறும். மேலும் நாடாளுமன்றத்தில் 200 பெண்கள் எம்.பி.க்களாக வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு சொல்கிறேன், பெண்களுக்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் 543 இடங்களிலேயே கொடுக்க வேண்டும் என்று கேட்டால் கொடுக்க மாட்டார்கள்.

தொகுதி மறுவரையறை காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் சதவீதம் குறையாது என உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்துள்ளார். அதைத்தான் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும், தமிழகத்தின் சதவீதம் குறையக்கூடாது என வலியுருத்தி இருக்கிறார். நமது சகோதரிகளுக்கு இப்போதுதான் இரு வாய்ப்பு கிடைக்கிறது. பெண்கள் அதிகமாக வரும்போது பெண்களுக்கான குரல் வலுவாக ஒலிக்கும்.

அதுமட்டுமின்றி, சட்டப்படி தொகுதி மறுவரையறை நிறைவேற்றப்பட வேண்டும். நிச்சயமாக தமிழ்நாட்டின் உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுக்காது. தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் துணைபோக மாட்டோம். எனவே, காவிரியும் வேண்டும், தொகுதி மறுவரையும் வேண்டும், பெண்களுக்கான இட ஒதுக்கீடும் வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.