நெல்லை,
யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில், முதல்-மந்திரி ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரபல சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதே சமயம், பயங்கரவாத தாக்குதால் பஹல்காமில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருந்த நிலையில், தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பஹல்காம் தாக்குதல் நடந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நெல்லையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை நினைத்துப் பாருங்கள். நாம் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டோம், ஆனால் நம்மை தொந்தரவு செய்பவர்களை நாம் சும்மா விடமாட்டோம். பொறுத்திருங்கள், உங்கள் லட்சியங்கள் நிச்சயம் நிறைவேறும், நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.