சென்னை,
தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவோம் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
“தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வு கடந்த மே 3-ந்தேதி நடந்தது. அதில், முறைகேடுகள் நடந்து நாடு முழுவதும் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். தேசிய தேர்வு முகமை அடுத்த அதிர்ச்சியாக மறுதேர்வை அறிவித்தது.
நீட் தேர்வு எழுதி ஓய்ந்திருந்த மாணவர்களுக்கு உளவியல் நெருக்கடியை உருவாக்கியதால் கோவையில் அனுகீர்த்தனா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். அதேபோல, சேலம் எடப்பாடி அருகே கோபிகா என்ற மாணவி தன்னை மாய்த்து கொண்டார் என்ற செய்தி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
இதுகுறித்து எந்த கவலையும் இல்லாமல் இன்னமும் நீட்டைத் திணித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. அதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். நீட் தேர்வுக்கு அஞ்சி நம் குழந்தைகள் இத்தகைய முடிவுகளை எடுக்கக்கூடாது என அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீட் தேர்வுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்போம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவோம்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.