தமிழக செய்திகள்

"டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்" - கன்னியாகுமரி மாவட்ட பாஜக போஸ்டரால் பரபரப்பு

திமுக அரசை விமர்சிக்கும் வகையில் கன்னியாகுமரியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் மது விற்பனையால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளை முன்வைத்து, திமுக அரசை விமர்சிக்கும் வகையில் கன்னியாகுமரியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், "திராவிட மாடல் என்ற பெயரில் தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்களை நேரடியாகத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் "தாலி அறுக்கும் டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்" என்ற வாசகம் பெரிய எழுத்துக்களில் இடம்பெற்றுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோரின் புகைப்படங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக இந்த போஸ்டர் பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளது. இந்த போஸ்டர்கள் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.