தமிழக செய்திகள்

அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம்: உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

உலக தாய்மொழி நாளையொட்டி, இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம் என்று கூறி தூத்துக்குடி எஸ்.பி. மதன் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு அரசு ஆணையின்படி பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. மதன் தலைமையில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அப்போது அவர்கள் அனைவரும், "எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டுவர பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலக தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், மாவட்ட காவல் அமைச்சுப் பணி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

SCROLL FOR NEXT