தமிழக செய்திகள்

தவெக அரசுக்கு காவல் அரணாக இருப்போம் - வைகோ உறுதி

தவெக அரசுக்கு கவசமாக இருந்து பாதுகாப்பு அளிப்போம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

மதிமுக பொதுச்செயலர் வைகோ திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

கட்டிங், கரப்ஷனுக்கு(ஊழல்) முற்றுப்புள்ளி வைத்தது தவெக அரசு. குதிரைப் பேரம் என வாய்க்கு வந்தபடி திமுக விமர்சிக்கிறது. எங்கள் கட்சியினரை திமுக சின்னத்தில் நிற்கவைத்து தங்களுடன் சேர்த்துக் கொண்டது தான் குதிரை பேரம். ஊழலை வேருடன் பிடுங்கி எரியும் அரசாக உள்ளதால் நாங்கள் தவெகவை ஆதரிப்போம். நாங்கள் காவல் அரணாக போர்க்கவசமாக இருந்து விஜய் அரசுக்கு பாதுகாப்பு அளிப்போம்.

கவர்னர் ஆட்சியை கொண்டு வந்தால் பாஜக ஆட்சியை கொண்டு வரலாம் என பகல் கனவு கண்டார்கள். அதனை முறியடித்துள்ளோம். தவெக ஆட்சியை அகற்ற தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். ஆழ்ந்து யோசித்து ஒவ்வொன்றையும் கிரகித்து செயல்பட்டு வருகிறார். அடுத்த 6 மாதத்தில் அவர் திறமை வாய்ந்தவராக திகழ்வார். இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது.”

இவ்வாறு அவர் கூறினர்.