தமிழக செய்திகள்

தவெகவிற்கு எதிராக வாக்களிப்போம் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் குழு பேட்டி

எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கூட்டணி பேசினார் என இல்லாத ஒன்றை, சிவி சண்முகம் அவதூறாக கூறியுள்ளார் என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் குழு கூறியுள்ளது.

சென்னை,

சட்டப்பேரவையில் சபாநாயகரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன், அக்ரி கிருஷ்ண மூர்த்தி கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பல்வேறு சிக்கல்கள் வந்தபோதும் 4 ஆண்டுகளுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கினார் பழனிசாமி. அதிமுகவை பாதுகாத்தவர் கே.பழனிசாமி. கட்சிக்கு பல்வேறு சோதனைகள் வந்தபோது அதனை எதிர்கொண்டு எடப்பாடி வென்றெடுத்தார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என தேர்தல் நேரத்தில் பயணம் செய்தார்.

எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர்.அதிமுகவின் 47 எம்.எல்.ஏ.க்களும் இதற்கான கையெழுத்து போட்டுள்ளனர்; அந்தக் கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம்.

திமுகவுடன் அதிமுக கூட்டணி பேசியதாக அவதூறான தவறான தகவலை சி.வி.சண்முகம் கூறியுள்ளார். தங்களது லாபத்திற்காக எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அவதூறு பரப்புகிறார். அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசைக்காக சி.வி.சண்முகம் இவ்வாறு பேசி வருகிறார்.அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை அவர்களை இவ்வாறு பேச வைக்கிறது. அதிமுகவின பிளவை முதல்-அமைச்சர் விஜய் ஆதரிக்க மாட்டார் என நம்புகிறோம் என்றார்.

அதனை தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,

அதிமுக கொறடா நான் தான். எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் சட்டப்பேரவையில் தவெக அரசு மீது நாளை நடைபெறும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிராக அதிமுக வாக்களிக்கும். கட்சியின் உத்தரவுக்கு மாறாக வாக்களிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.