சென்னை,
விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தள்ளிப்போனது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜனநாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது 'ஜனநாயகன்' படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த சூழலில், கடந்த 9-ந்தேதி மாலை ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனநாயகன் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என படக்குழுவினர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார், படத்தை இணையத்தில் வெளியிட்டது யார்? என்பது குறித்த முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தை லீக் செய்த வெப்சைட்டுகளை முடக்கி தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். படத்தை பதிவிட்டுள்ள வெப்சைட்டுகள், டெலிகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், படத்தை பகிர்ந்த சமூக வலைதள பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. படத்தை முதலில் வெளியிட்டது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.