தமிழக செய்திகள்

திருமணம் ஆன 10 நாட்களில் ஓட்டம் பிடிப்பார்: பல ஆண்களை ஏமாற்றி மோசடி..கல்யாண ராணி கைது

திருமணம் செய்த 10 நாட்களிலேயே ராமலெட்சுமி நகை மற்றும் பணத்துடன் மாயமானார்.

திண்டுக்கல்,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 5க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து மோசடி மற்றும் அவருக்கு உதவிய புரோக்கர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சமீப காலமாக விவாகரத்தான ஆண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி, வயது அதிகமுடைய ஆண்கள் ஆகியோரை குறி வைத்து திருமண மோசடி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து ஆன ஒருவரை ஏமாற்றி திருமணம் முடிந்த சில நாட்களில் நகை, பணத்துடன் பெண் மாயமானார்.

இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏழ்மை நிலையில் உள்ள பெண் என்றும், குடும்பத்துக்கு உதவுவார் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி பெண் புரோக்கர்கள் இது போன்ற நபர்களை குறி வைத்து திருமணம் செய்து வைத்து பின்னர் தலைமறைவாகிவிடுவது வாடிக்கையாக உள்ளது.

இதேபோல் பழனி அருகே கோதை மங்கலம் பகுதியை சேர்ந்த சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் பாலகிருஷ்ணன் (வயது 29) என்பவர் தனக்கு பல்வேறு புரோக்கர்கள் மூலம் பெண் தேடினார். இதனை அறிந்து விருதுநகரை சேர்ந்த புரோக்கர்களான கிருஷ்ணவேணி (வயது 57) சித்ரா (வயது 36) மஞ்சன்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜோசப் (வயது 62) ஆகியோர் அவரிடம் அறிமுகமாகி பேசினர். சாத்தூர் படந்தல் கிராமத்தை சேர்ந்த ராமலட்சுமி (வயது 26) என்பவரை திருமணம் செய்து வைப்பதாகவும் அவர் குடும்பத்தை நல்ல முறையில் கவனித்து கொள்வார் என்றும் அவரிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலகிருஷ்ணனுக்கு ராமலெட்சுமியை திருமணம் செய்து வைத்தனர். இதற்கு புரோக்கர் கமிஷன் ரூ.2.50 லட்சம் பெற்றுக்கொண்டனர். மேலும் மணப்பெண்ணுக்கு 10 கிராம் எடையில் நகை அணிவித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்த 10 நாட்களிலேயே ராமலெட்சுமி நகை மற்றும் பணத்துடன் மாயமானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். தனக்கு அறிமுகமான புரோக்கர்களை செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போதும் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவரது புகைப்படத்துடன் தனது தெரிந்த உறவினர்கள் பலரிடம் கூறி தேடி வந்துள்ளார். மேலும் இது குறித்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த வாலிபருக்கு ராமலெட்சுமியுடன் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பாலகிருஷ்ணனுக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக பழனி தாலுகா போலீசார் உதவியுடன் அங்கு சென்று ராமலெட்சுமி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த புரோக்கர்களான கிருஷ்ணவேனி, சித்ரா, ஜோசப் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 5க்கும் மேற்பட்ட ஆண்களை ராமலெட்சுமிக்கு திருமணம் செய்து வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனால் இந்த கும்பலிடம் சிக்கிய நபர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.