ராமேசுவரம்,
தமிழகத்தின் ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் அமைந்து உள்ளது கச்சத்தீவு. இருநாடுகளின் கடல் பரப்பில் நடுவே அமைந்துள்ள இத்தீவு சுமார் 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
அப்போது இந்த தீவில் உள்ள அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக மீனவர்களை அனுமதிப்பது, மீன்பிடிப்பின்போது தமிழக மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் இத்தீவை பயன்படுத்திக் கொள்வது என்ற ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்திக் கொள்ள இலங்கை அரசு அனுமதி மறுத்துவிட்டது.
ஆனால் வருடந்தோறும் நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அங்கு செல்வதற்காக சுமார் 3,500 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களை அழைத்துச்செல்வதற்காக ராமேசுவரத்தை சேர்ந்த 116 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
முன்பதிவு செய்திருந்தவர்கள் நேற்று அதிகாலையிலேயே துறைமுகம் கடற்கரை பகுதிக்கு வந்தனர். காலை 7.15 மணி அளவில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட முதல் படகை மாவட்ட வருவாய் அதிகாரி சங்கர நாராயணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு மீரா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஒவ்வொரு படகுகளாக புறப்பட்டு சென்றன. இதேபோல் இலங்கையில் இருந்தும் ஏராளமான படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்ததால் தீவு களைகட்டி காணப்பட்டது.
நேற்று மாலை 5 மணி அளவில் விழாவின் தொடக்கமாக ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில், இலங்கையின் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்தி நாதன், அந்தோணியாரின் உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ராமேசுவரம் வேர்க்கோடு ஆலய பங்குத்தந்தை தாமஸ் பரிபாலன், தலைமையில் முதல் நாள் திருவிழா திருப்பலி நடந்தது. அதன்பின்பு சிலுவைப்பாதை பிரார்த்தனை நடந்தது. பெரிய சிலுவையுடன் இந்த வழிபாட்டில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்தை சுற்றி கடற்கரையில் நடந்த சிலுவைப்பாதை பிரார்த்தனை என்பது விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட சப்பரத்தை இலங்கை கடற்படையினர் தோளில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்தனர். தொடர்ந்து இருநாட்டினரும் ஒன்றாக கடற்கரையில் அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிலையில் விழாவின் 2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு திருப்பலி நடக்கிறது. அதன் பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.