திண்டுக்கல்,
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வந்தாலும், வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருவதால் மக்கள் குடும்பத்துடன் மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று வார விடுமுறை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனர்.
இதனிடையே தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை காரணமாகவும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு செல்லும் மலைச்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கொடைக்கானல் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வழ்ச்சி முதல் நகரப்பகுதி வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், சாலைகளை அகலப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.