தமிழக செய்திகள்

தொடர் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

கோடை விடுமுறை இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. கடும் கோடை வெயில் வாட்டி வதைப்பதால், கொடைக்கானல் பகுதியில் நிலவும் இதமான சூழலை அனுபவிப்பதற்காக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கிறார்கள். அதிலும் விடுமுறை நாட்களில் கடுமையான கூட்டம் நிலவுகிறது. கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

அலைமோதும் கூட்டம்

கோடை விடுமுறை இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில், இன்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு முதலே சாரைசாரையாக வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன.

இதனால், மலைச்சாலையில் இரவில் இருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கொடைக்கானல் கடை வீதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.