தமிழக செய்திகள்

பெருந்துறையில் ரூ.3,000 கோடி நலத்திட்ட உதவிகள்: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்

கைத்தறி படுக்கை விரிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் பணம் கொடுத்து வாங்கினார்.

ஈரோடு,

தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங் களை முதல்-அமைச்சர் விஜய் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கி வருகிறார். இதற்காக மாவட்டம் வாரியாக செல்லும் அவர் அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், 'ரோடு ஷோ' வாயிலாக பொதுமக்களையும் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை 4 வழிச்சாலை காஞ்சிக்கோவில் ரோட்டில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணா மகாலில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ரூ.3,000 கோடி வங்கி நிதி இணைப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக மகளிர் சுய உதவிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியைப் ஆர்வத்துடன் பார்வையிட்டு, அவர்கள் தயாரித்த பொருட்களை பணம் கொடுத்து வாங்கினார். தனது உருவம் பொறிக்கப்பட்ட கைத்தறி படுக்கை விரிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு அவர்களிடம் பணம் கொடுத்து வாங்கினார்.

முதல்-அமைச்சர் விஜய்யிடம் நிதியுதவி பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுவினர், அவரிடம் 'Little Hearts' சின்னத்தைக் காட்டுமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று விஜய்யும் அந்தச் சின்னத்தைக் காட்ட, மகிழ்ச்சியுடன் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு நிதியுதவி வழங்கிய முதல்-அமைச்சர் விஜய், அவர்களுடன் தோளில் கைபோட்டபடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். நிதியுதவி பெற்றுக்கொண்ட குழுவினர், விஜய்யிடம் ஆட்டோகிராப் பெற்றும் மகிழ்ந்தனர். மேலும் முதல்-அமைச்சர் விஜய்யுடன் இணைந்து மகிழ்ச்சியாக ஹார்ட் கை சைகை செய்த பெண்கள் கவனம் பெற்றனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், விஜய் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதல்-அமைச்சர் விஜய்க்கு, எம்ஜிஆர் செங்கோல் வழங்குவது போன்ற நினைவு பரிசு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT