தமிழக செய்திகள்

இனிமே சண்டை இல்லை..நாம பிரெண்ட்ஸ்.. டெலிவிரி ஊழியரை கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு.. மன்னிப்பு கோரிய இளம்பெண்

அப்பெண்ணுக்கும் டெலிவரி செய்ய வந்த கிஷோர் என்ற நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை,

டெலிவரி ஊழியரை ஆபாசமாக பேசிய பெண்ணின் வீடியோ வெளியாகி அப்பெண்ணிற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த இளைஞரை அழைத்து அந்த பெண் மன்னிப்பு கேட்டு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

டெலிவிரி ஊழியர்கள்

தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் நாம் வாங்க விரும்பும் பொருட்கள் அனைத்தும் வீட்டு வாசலுக்கே வரும் வகையில் காலம் மாறி விட்டது. ஸ்விக்கி, சோமட்டோ, பிக் பாஸ்கெட், பிளிங்கிட், அமேசான், பிளிப்கார்ட், செப்டோ போன்ற பல வகையான நிறுவனங்கள் தங்கள் கீழ் டெலிவரி ஊழியர்களை கொண்டு இத்தகைய தொழிலை மேற்கொண்டு வருகிறது. உணவு, மளிகைப் பொருட்கள், ஆடைகள் என அனைத்தும் கிடைக்கிறது. இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் என அனைவரும் சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆர்டருக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்பதால் பலரும் நிரந்தர பணி அமையும் வரை இத்தகைய பணிகளை தங்கள் வாழ்வாதாரத்துக்காக செய்து வருகின்றனர். ஆனால் சில இடங்களில் இத்தகைய டெலிவரி ஊழியர்களை ஆர்டர் செய்யும் மக்கள் டெலிவிரி ஊழியர்களை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. அடிமை போல் நடத்தி கேவலமாக பேசும் காட்சிகளும் சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங் ஆவதுண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது.

வசைபாடிய இளம்பெண்

சென்னை மணலி அருகே உணவு ஒன்றை இளம்பெண் ஒருவர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் தன் முகவரியை தவறாக கூறியதாக தெரிகிறது. . கூகுள் மேப் பார்த்து டெலிவரி ஊழியர்கள் வருவார்கள் என்பதால் அந்த முகவரி மேப்பிலும் தவறாக காட்டியுள்ளது. இதனால் உணவை டெலிவரி செய்ய தாமதமானதாக சொல்லப்படுகிறது. இதனால் அப்பெண்ணுக்கும் டெலிவரி செய்ய வந்த கிஷோர் என்ற நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த அந்த பெண் கிஷோரை கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். காது கொடுத்து கேட்க கூடாத அளவிற்கு மிகவும் அறுவதறுக்தக்க வகையில் வசைபாடினார். அதுமட்டுமல்லாமல் அந்த ஊழியரின் குடும்பத்தையும் இழிவாக பேசினார். மேலும் எல்லாவற்றையும் பேசிவிட்டு போலீசுக்கும் போன் போடும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. பலரும் அந்த பெண்ணை வெளுத்து வாங்கினர்.

பகிரங்க மன்னிப்பு

இந்த நிலையில் டெலிவரி ஊழியர் கிஷோரை தேடி கண்டுபிடித்த அந்த இளம்பெண் நடந்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம். இந்த செயல் மற்ற டெலிவரி ஊழியர்களை காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். நாங்கள் இனிமேல் நண்பர்கள்..இனிமே சண்டைலாம் இல்லை.. நாம ப்ரெண்ஸ் சரியா என தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.