தமிழக செய்திகள்

குளச்சலில் கரை ஒதுங்கிய திமிங்கலப் புள்ளி சுறா

குளச்சல் அருகே சுமார் 5 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன் கரை ஒதுங்கியது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் சுமார் 5 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன் கரை ஒதுங்கியது. கடற்கரையில் ஒதுங்கிய பெரிய அளவிலான ராட்சத மீன், இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து உள்ளூர் மீனவர்கள் கூறும்போது, கடல் நீரோட்டம் மற்றும் காலநிலை மாறுபாடு காரணமாக கடற்கரையோரமாக வரும் திமிங்கல புள்ளி சுறா மீன்கள், வலையில் சிக்கி உயிரிழப்பதாக தெரிவித்தனர்.

திமிங்கலப் புள்ளி சுறா பொதுவாக மனிதர்களுக்கு ஆபத்தில்லாத, பாதுகாக்கப்பட்ட இனமாகும். இந்த இனங்கள் இந்திய கடல் உயிரியல் சட்டங்களின் கீழ் பாதுகாப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆகையால், சம்பவம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.