சென்னை,
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, முதல் 100 நாட்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ளது. 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்னென்ன செய்தது என்பது பின்வருமாறு:
4,231 புகார்களுக்கு சம்பவ இடத்திற்கே சென்று நடவடிக்கை.
58 பெண்கள், 94 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்பு.
111 பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் மீட்பு.
54 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.
636 பள்ளி இடைநிறுத்த மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர உதவி.
334 குற்ற வழக்குகள் பதிவு செய்ய முக்கியப் பங்களிப்பு.
கல்வி நிறுவனங்களில் 14,231 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பிற பொது இடங்களில் 34,632 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
புலம்பெயர் தொழிலாளர்களிடையே 2,236 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மாநிலம் முழுவதும் 15,77,460 பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் தொடர்ந்து கண்காணிப்பு.
70 களப்பிரிவுகள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பெண்களுக்கு உதவ 1091 சிங்கப்பெண் உதவி எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது.
இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய், புதிதாக அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை (Singappen Special Force SSF) 09.06.2026 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், இச்சிறப்புப்படை 10.06.2026 முதல் செயல்படத் தொடங்கியது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதற்கு முன்பே குற்றம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் அதற்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே கணித்து அதை தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு காவல் அமைப்பாகும். காவல் இருப்பு, தீவிர ரோந்துப்பணி, கண்காணிப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உடனடி தலையீடு ஆகியவற்றின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பாதுகாப்பு உணர்வை இச்சிறப்புப்படை மேம்படுத்தியுள்ளது.
செயல்படத் தொடங்கிய முதல் 100 நாட்களுக்குள், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் 70 களப்பிரிவுகளை ரோந்து பணியில் ஈடுபடுத்தி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு அவசர காலங்களில் விரைவாகவும் எளிதாகவும் உதவி கிடைக்கச் செய்யும் வகையில், 22.06.2026 9 1091, சிங்கப்பெண் உதவி எண்ணாக (Singappen Helpline) அறிவிக்கப்பட்டது. இவ்வுதவி எண், 112 அவசரகால உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டு புகார்களுக்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி எண் பயிற்சி பெற்ற காவல் ஆளிநர்களால் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
களத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 70 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் களப்பணியாளர்கள் அனைவருக்கும், அவர்களது நுண்திறன் மற்றும் பணித்திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 79 கூடுதல் குழுக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, களப்பணிகளுக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை களப் பிரிவினர்களின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்காக இணையவழிப் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அவைகளில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை கையாளுதல், பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளுதல், சமூக ஊடகங்களை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துதல், இணையவழிப் பாதுகாப்பு மற்றும் இணையவழிக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் சமூக பங்களிப்பை வலுப்படுத்தும் முன்னெடுப்பாக, 38 அரசு சாரா தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் 19.06.2026 அன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்தால் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் மூலம் கள அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு சேவைகள் மற்றும் பயனுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அணுகு முறைகள் குறித்து கருத்துகள் மற்றும் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் பிற துறைகளான உயர்கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளுடனும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலைமையகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதுடன், தகவல்களை உரிய நேரத்தில் பகிர்ந்து உதவி தேவைப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரைவான ஆதரவை முனைப்புடன் வழங்கி வருகிறது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பட தொடங்கிய முதல் 100 நாட்களில் பல முக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 4,231 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அறிவுசார் குறைபாடுகளுடன் காணப்பட்ட 111 நபர்களை மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 58 பெண்களையும், 94 குழந்தைகளையும் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்புள்ள சூழல்கள் உருவாகாமல் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் 54 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளனர். பள்ளிப்படிப்பை இடை நிறுத்திய 636 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவியுள்ளனர்.
சிங்கப்பெண் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பல்வேறு குற்றச் சம்பவங்களில் சிறப்பு அதிரடிப்படை களப்பிரிவினர் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கியதுடன், 334 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர். குற்றத்தடுப்பு மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கல்வி நிறுவனங்களில் 14,231 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன, பிற பொது இடங்களில் 34,632 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களிடையே 2,236 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 1,577,460 பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் (vulnerable hotspots), சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் முறையாக கண்காணிப்பு மேற்கொண்டு தொடர்ந்து ரோந்து மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் தாங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை எவ்வித தயக்கமும் அச்ச உணர்வுமின்றி தானாக முன்வந்து தெரிவித்துள்ளனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை களப் பிரிவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் போது மேற்கொண்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, 20 சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்கனவே நிகழ்ந்த குற்றங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காவல்துறை உதவி கிடைக்கச் செய்யப்பட்டதுடன், உரிய நேரத்தில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிக்க அவர்களை ஊக்குவிப்பதிலும், தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு குற்றச் சம்பவத்தில், ஏப்ரல் 2026-ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், குடும்பத்தினரால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த அச்சத்தின் காரணமாக, ஆரம்பத்தில் சம்பவத்தை மறைத்து, நகைகள் திருடப்பட்டதாக மட்டுமே தெரிவித்தார் பின்னர், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் நம்பிக்கை பெற்ற அவர், தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்தும் வெளிப்படையாகத் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் புதிதாக வழக்குப் பதிவு செய்து, பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஏற்கனவே சரித்திரப் பதிவேடு (History Sheet) பராமரிக்கப்பட்டு வந்த குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் மதுரை மாநகரிலுள்ள ஒரு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 7ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி, ஒரு வருடத்திற்கும் மேலாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த, 55 வயது நபர், பற்றி தகவல் தெரிவித்தார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு, சிறுமியின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய போது, 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஏப்ரல் 2024-ம் வருடம் தனது மாமா தனது வீட்டிற்கு வந்த போது, தகாத முறையில் தொட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் தெரிவித்தார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக மாணவிகள் தெரிவித்தனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, போக்சோ சட்டம் மற்றும் SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மற்றொரு சம்பவத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 11 வயது சிறுமி ஒருவர், கடந்த நவம்பர் 2024-ம் வருடம் 66 வயது நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். சிங்கப்பெண் சிறப்பு உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அதிரடிப்படையினர்
சேலம் மாவட்டத்தில், உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய போது, டிசம்பர் 2025-ம் வருடம் தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, உறவினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஒரு மாணவி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய உதவி வழங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரால் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவர் ஒருவர் தாமாக முன்வந்து, 20 மற்றும் 30 வயது மதிக்கதக்க இரு ஆண்கள் கடந்த மூன்று மாதங்களாக தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி, மிரட்டி வந்ததாக தெரிவித்தார். அம்மாணவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மதுரை மாநகரில் அடையாளம் தெரியாத ஷேர் ஆட்டோ ஓட்டுநரால் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை மேற்கொண்டு, மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலம் அந்நபரை அடையாளம் காண சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதுடன், தீவிர தொடர் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் மூலம் அந்நபரை கண்டறிந்து கைது செய்தனர். காவல்துறை விசாரணையை திசை திருப்பவும், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு உதவவும் முயன்ற மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தயக்கமின்றி உதவியை நாடவும், குற்றங்களுக்கு எதிராக புகாரளிக்கவும் ஏதுவான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்ட முதல் 100 நாட்களில், தொடர் ரோந்துப் பணிகள் மூலம் காவல் இருப்பை உறுதி செய்து சமூகப் பங்களிப்புடன் கூடிய முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பணித்திறனை மேம்படுத்தி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், இச்சிறப்பு அதிரடிப்படை தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும் நோக்குடன் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.