தமிழக செய்திகள்

ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன வசதிகள்? ஐகோர்ட்டு கேள்வி

பட்டியலை அடுத்த வாரம் தாக்கல் செய்யும்படி தெற்கு ரெயில்வே தரப்புக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை செய்துக் கொடுக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, பெரம்பூர் ரெயில் நிலையத்தில் சாய்தளபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஞானபாரதி என்பவர் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த 2 வழக்குகளும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் எந்தெந்த ரெயில் நிலையங்களில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான விவர பட்டியலை தாக்கல் செய்ய உள்ளதாக தெற்கு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பட்டியலை அடுத்த வாரம் தாக்கல் செய்யும்படி தெற்கு ரெயில்வே தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.