தமிழக செய்திகள்

மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் முக்கியப் பரிந்துரைகள் என்னென்ன... ?

மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழு அறிக்கையின் முதல் பாகம் நேற்றைய சட்டபையில் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு தனது அறிக்கையின் முதல் பாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த 16-ம் தேதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கை நேற்று தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதில், அதிகாரப் பரவலாக்கத்துக்கும் மாநில சுயாட்சிக்குமான வாதம், அரசமைப்புச் சட்டத் திருத்தம், மாநிலங்களின் ஆட்சிநில ஒருமைப்பாடு, மொழி, கவர்னர், தொகுதி மறுவரையறை, தேர்தல்கள், கல்வி, சுகாதாரம், சரக்கு மற்றும் சேவை வரி ஆகிய 10 இயல்களில் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

முக்கியப் பரிந்துரைகள்:-

1 ஒன்றியமும், மாநிலமும் அதிகார போட்டியாளர்களாக இல்லாமல், நிர்வாகத்தில் பங்காளர்களாக செயல்படுவது கூட்டாட்சி சமநிலையை பாதுகாக்க உதவும்.

2 பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக்கூடாது.

3 புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதாவை அறிமுகம் செய்ய, பாதிக்கப்படும் மாநில சட்டமன்றங்களில் ஒப்புதலை பெற வேண்டும்.

4 ஒரே நாடு - ஒரே மொழியை இந்தியா கைவிட வேண்டும்.

5 மும்மொழித் திட்டம் தோல்வி என்பதை உணர்ந்து இருமொழி திட்டத்திற்கு மாற வேண்டும்.

6 மாநில சட்டமன்றம் பரிந்துரைக்கும் 3 பெயரில் ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.

7 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டிற்கான எண்ணிக்கை முடக்கத்தை 2126 வரை நீட்டிக்க அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்.

8 சுயாட்சி உடைய மாநில தேர்தல் ஆணையங்கள், சட்டமன்ற தேர்தல்கள் & உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும்.

9 கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

10 மாநிலங்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட சுகாதாரத்துறையில் மத்திய அரசு தலையிடுவது தவிர்க்க வேண்டும்.

11 தன்னாட்சி பெற்ற சுதந்திரமான நியாயமான சரக்கு மற்றும் சேவை வரி அவயத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.