தமிழக செய்திகள்

அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பள்ளிகளில் என்ன வேலை? - வானதி சீனிவாசன்

சிறுவர்களை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் ‘ரீல்ஸ்’ மோகம் எப்போது குறையப் போகிறது? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

உத்திரமேரூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் பயிலும் , மாணவர்களிடம் தவெக நிர்வாகிகள் முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, பிரசாரம் செய்துள்ளதனர். இதற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

‘ரீல்ஸ்’ மோகம்

சிறுவர், சிறுமிகளை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் தவெக அரசின் ‘ரீல்ஸ்’ மோகம் எப்போது குறையப் போகிறது?

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் பயிலும் சிறார்களிடம் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, தவெக நிர்வாகிகள் அரசியல் நோக்கத்துடன் பேசும் காணொளி வெளியாகியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தேர்தல் பரப்புரையின்போது சிறார்களிடம், வீட்டிலுள்ள பெரியவர்களைத் தவெகவுக்கு வாக்களிக்கச் சொல்லுமாறு வாக்குக் கேட்ட முதல்-அமைச்சர் விஜய்யின் அணுகுமுறை, தற்போது அவரது கட்சி நிர்வாகிகளால் பள்ளிகளுக்குள்ளும் கொண்டு செல்லப்படுவது அரசியல் மாண்புக்கும் கல்விச் சூழலுக்கும் எதிரானது.

பள்ளிகளில் என்ன வேலை?

தலைவர்களின் வரலாற்றையும் சாதனைகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பது ஆசிரியர்களின் பொறுப்பு. அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பள்ளிகளில் என்ன வேலை?

விஜய்யே, கல்விக்கூடங்கள் உங்கள் புகழைப் பரப்பும் மாநாட்டுத் திடல்கள் அல்ல என்பதை உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உணர்த்துங்கள்.

பள்ளிகள் கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் புனிதமான இடங்கள்; உங்கள் புகழ்பாடும் விளம்பரப் பொதுக்கூட்ட மேடைகள் அல்ல!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.