தமிழக செய்திகள்

ஆட்சிக்கு வந்து 40 நாட்களில் என்ன செய்தார் முதல்-அமைச்சர் விஜய்.? சட்டசபையில் 'லிஸ்ட்' போட்டு அதிரடி

பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் அதற்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

சென்னை,

ஆட்சிக்கு வந்து 40 நாட்களில் என்னவெல்லாம் செய்திருக்கிறோம்? என்பது பற்றி சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் நேற்று பட்டியலிட்டு பேசினார்.

தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையின்போது பேசியதாவது:-

நாம் ஆட்சிக்கு வந்து 40 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் என்ன செய்தீர்கள்.. என்ன செய்தீர்கள்..? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒரு 'லிஸ்ட்' சொல்கிறேன் கேளுங்கள்.

சிங்கப்பெண் படை

* பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு படை.

* 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம்.

* போதைப்பொருள் ஒழிப்புக்காக தனிப்படை.

* குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.134 கோடியே 83 லட்சத்தில் சிறப்பு தொகுப்பு திட்டம்.

* வழிபாட்டுத்தலம், பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் அதற்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டன. அங்கு வேலையில் இருந்த வர்களுக்கு வேறு கடைகளில் வேலை.

அம்மா உணவகங்கள்

* கவனிக்கப்படாமல் விடப்பட்ட அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டன.

* பத்திரப்பதிவு துறையில் பகல் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. வருகை இல்லா ஆவணப்பதிவு முறை கொண்டுவர உத்தேசிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

'ஜல் ஜீவன்' மிஷன் திட்டம்

* அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஸ்கேன் மையங்களில் கருவுறுவதற்கு முன் மற்றும் பின் ஏற்படும் தவறுகளை கண்காணிக்கவும், மருத்துவ நிறுவனம் முறைப்படுத்தும் சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா? என கண்காணிக்கவும் மருத்துவ மற்றும் ஊரக பணிகள் இயக்கத்தின் பயன்பாட்டுக்கு 40 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

* கூட்டுறவு வங்கியில் ஏழை எளிய மக்கள் வாங்கிய கடனுக்கு முதல் முத்தாய்ப்பாக ரூ.2,045 கோடி தள்ளுபடி செய்து ஆணையிடப்பட்டிருக்கிறது.

* மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜல் ஜீவன் மிஷன் திட்டம் புதுப்பிக்கப்பட்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2.0 நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மின்னணு முறையில் மாற்றம்

* ரூ.18,500 கோடி அளவில் உறுதியளிக்கப்பட்ட காஞ்சீபுரம் மாவட்டத்தில் மைய விரிவாக்க திட்டம்.

* கோவையில் மின்னணு பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தி திட்டம்.

* திருவள்ளூர் மாவட்டத்தில் காட்டுப்பள்ளி எல் அன்ட் டி கப்பல் கட்டும் தளம் விரிவாக்கத்துக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன.

* அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மின்னணு முறையில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

லஞ்ச லாவண்யமற்ற தமிழ்நாடு

* சட்டவிரோத கல்குவாரி மற்றும் அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு குவாரிகள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. கனிமங்களை கண்காணிப்பது, எல்லையை நிர்வகிப்பது மற்றும் ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்வது போன்றவற்றை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

* அனைத்து துறைகளிலும் அலுவர் தலையீடு இல்லாமல் லஞ்ச லாவண்யமற்ற தமிழ்நாட்டை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

இது வெறும் 'சாம்பிள்'தான். 40 நாட்களுக்குள் இவ்வளவும் செய்திருக்கிறோம் என்றால், இனிவரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக 'ஸ்டெடி'யாக உழைத்து லஞ்சம் லாவண்யம் இல்லாத ஊழல் இல்லாத பெண்களுக்கு பாதுகாப்பான சுதந்திரமான வெளிப்படையான தமிழ்நாட்டை நம் சொந்தங்களான நம் தமிழக மக்களுக்கு தருவதுதான் நம்முடைய ஒரே குறிக்கோள். கண்டிப்பாக அதை நிறைவேற்றி காட்டுவோம். 8 கோடி மக்கள் நம்முடன் இருக்கும் போது ஏன் அதை செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.