சென்னை,
பாம்பு கடிக்கு சிகிச்சை பெற வந்த சுடர்மணி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு சுகாதார அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற வந்த சுடர்மணி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட முதற்கட்ட தகவலின்படி, அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் பணியில் இருந்தபோதிலும், நோயாளியின் நிலை குறித்து செவிலியர்கள் உரிய நேரத்தில் மருத்துவருக்கு தகவல் தெரிவிக்காமல் காலதாமதம் ஏற்பட்டது எனத் தெரியவந்துள்ளது.
கவனக்குறைவாக செயல்பட்ட பணியில் இருந்த செவிலியர்களுக்கு உடனடியாக குறிப்பாணை (Memo) வழங்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக, விருதுநகர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநரை (JDHS Virudhunagar) நாளை நேரில் சென்று விசாரணை நடத்த உத்திரவிடப்பட்டுள்ளார்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.