சென்னை,
தமிழக அரசியலில் 'குதிரை பேரம்' என்ற வார்த்தை தற்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி என்றால் என்ன? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலுக்கு முன்பு 'தற்குறி கூட்டம்' என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால், தேர்தலுக்கு பிறகு 'குதிரை பேரம்' என்ற வார்த்தையை தினந்தோறும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால், அதிக இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. அந்தக் கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.
அதேநேரத்தில், சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க.வை சேர்ந்த 25 பேரும், அ.ம.மு.க. சேர்ந்த ஒருவரும் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன.
இதனால், ஆவேசம் அடைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் த.வெ.க. அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு, எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுப்பதாக குற்றம்சாட்டினார்கள்.
இப்போது, த.வெ.க. அரசை களைக்க, எதிர்க்கட்சியான தி.மு.க.வே அக்கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.35 கோடி தருவதாக குதிரை பேரத்தில் ஈடுபட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பான விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, குதிரை பேரம் என்றால் என்ன? என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
அதாவது, அரசியலில் ஒரு கட்சி ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கவோ அல்லது ஆட்சியை கவிழ்க்கவோ, பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அல்லது எம்.பி.க்களை பண பலத்தாலோ அல்லது பதவி ஆசையாலோ விலைக்கு வாங்கும் முறையே 'குதிரை பேரம்' என்று அழைக்கப்படுகிறது.
குதிரை பேரம் என்ற சொல் உருவானதற்கான பின்னணியாக, முந்தைய காலத்தில் குதிரை வியாபாரிகள் தங்களது குதிரைகளை விற்கவும், வாங்கவும் வாடிக்கையாளர்களுடன் சாதூர்ய பேச்சு வார்த்தையிலும், தந்திரங்களிலும் ஈடுபடுவார்களாம். இதில் இருந்து நாளடைவில் இப்பெயர் உருவானது என்று சொல்லப்படுகிறது.
ஆனால், குதிரை பேரம் என்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையைச் சிதைக்கும் ஒரு அரசியல் ஊழலாக பார்க்கப்படுகிறது.