தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யிடம் அன்புமணி ராமதாஸ் அளித்த மனுவில் இடம்பெற்றிருப்பது என்ன..? முழு விவரம்

சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விஜய்யிடம் அன்புமணி அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய்யிடம் அன்புமணி ராமதாஸ் அளித்த மனுவில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு வணக்கம்!

தமிழ்நாட்டில் சமூகநீதியைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த மனுவை தங்களிடம் வழங்குகிறேன்.

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை அமைத்து மக்கள் விரும்பும் நல்ல நிர்வாகத்தை வழங்குவதற்காக தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் சிக்கல்களில் மிகவும் முதன்மையானது தற்போது நடைமுறையில் உள்ள சமூகநீதியை பாதுகாப்பதும், அனைவருக்கும் முழுமையான சமூகநீதியை வழங்குவதும் ஆகும்.

தமிழ்நாட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்று அதன் சமூகநீதிக் கொள்கை ஆகும். இந்தியாவில் 100% இட ஒதுக்கீட்டை 100 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த மாநிலம் என்ற சிறப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. இப்போதும் 50% உச்சவரம்பு என்பதைக் கடந்து 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவது மட்டுமின்றி, அதற்கான சட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்த ஒரே மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டுக்கு தான் உண்டு. ஆனால், தமிழ்நாட்டின் சிறப்புக்கு காரணமான 69% இட ஒதுக்கீட்டிற்கே இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 13.07.2010-ஆம் தீர்ப்பளித்த சுப்ரீம்கோர்ட்டு,‘‘69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்” என்று ஆணையிட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் 2012ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு

இந்த வழக்கு கடந்த மே 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கைத் தொடர்ந்த சில மாணவர்கள் படிப்பை முடித்து விட்டதைக் காரணம் காட்டி இணை வழக்குகளை சுப்ரீம்கோர்ட்டு முடித்து வைத்தாலும் கூட, இரு முதன்மை வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

அந்த வழக்குகள் சுப்ரீம்கோர்ட்டில் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். அப்போது, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடுப் பிரிவினரின் மக்கள்தொகை 69%க்கும் கூடுதலாக இருப்பதை நிரூபிக்காவிட்டால், 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. எனவே, 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவதாக தமிழ்நாட்டில் சுமார் 100 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் போதிலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதன் பயன்கள் சென்றடையவில்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 69% இட இதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.50%, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.50%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியல் இனத்தவருக்கு 15%, பட்டியலின அருந்ததியருக்கு 3%, பழங்குடியினருக்கு 1% வழங்கப்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சமூகங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில் 7 சமூகங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் 115 சமூகங்களும், அருந்ததியர்களையும் உள்ளடக்கிய பட்டியலினத்தில் 76 சமூகங்களும், பழங்குடியினத்தில் 36 சமூகங்களும் உள்ளன. இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் எந்த சமூகத்திற்கும் அதன் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு காரணம், சமமற்றவர்கள் சமமானவர்களாக ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது தான்.

இவர்களில் எந்தெந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்பதைக் கண்டறிந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கான சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் அவர்களை முன்னேற்ற முடியும். அதற்கான அத்தியாவசியத் தேவை தான் சமூகநீதி எனும் சாதிவாரி கணக்கெடுப்பு.

மூன்றாவதாக சமூகநீதியைக் கடந்து, தமிழ்நாட்டு மக்களின் கல்வி நிலை, பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு, வசிப்பிடம், வாழ்க்கைத் தரம் போன்ற அடிப்படையான தரவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தொகுக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சமூக நிலையையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை இந்தத் தரவுகளின் அடிப்படையில் தான் மேற்கொள்ள முடியும். இந்த அடிப்படைத் தரவுகளை சமூகநீதி சர்வே மூலம் தான் திரட்ட இயலும்.

மத்திய அரசு

கல்வியிலும், சமூக நிலையிலும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகள் முடிவு செய்தாலும் அதை ஐகோர்ட்டும், சுப்ரீம்கோர்ட்டும் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, நவீன, நிகழ்கால, பொருத்தமான தரவுகள் (Modern, Contemporary, Pertinent Data) இருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று ஐகோர்ட்டும், சுப்ரீம்கோர்ட்டும் கூறியுள்ளன. இத்தகைய சூழலில், அவற்றைத் திரட்டுவதற்காக தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே மேற்கொள்ள வேண்டும்.

2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அந்தக் கணக்கெடுப்பில் கிடைக்கும் விவரங்கள் போதுமானவையாக இருக்காது. தேசிய அளவில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் சாதிவாரி கணக்கெடுப்பில் சாதிவாரியான மக்கள்தொகை உள்ளிட்ட சில மேக்ரோ தரவுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். அவற்றை வைத்துக் கொண்டு மாநிலங்களில் தேவைப்படும் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அதனால், ஒவ்வொரு மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டியது தவிர்க்கவே முடியாததாகும்.

தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்திலும் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு எந்தத் தடையும் இல்லை. 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி (The Collection of Statistics Act, 2008) தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசால் மேற்கொள்ள முடியும். இந்த சட்டத்தின்படி சாதிவாரி சர்வே நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று பிகார், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. அந்தத் தீர்ப்புகளுக்கு சுப்ரீம்கோர்ட்டும் தடை விதிக்கவில்லை.

இந்தியாவில் பீகார், தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் இத்தகைய சர்வேயை நடத்தியுள்ளன. கர்நாடகம் கடந்த பத்தாண்டுகளில் இரு முறை சாதிவாரி சர்வேயை நடத்தியிருக்கிறது. பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வேக்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அம்மாநிலங்களில் இட ஒதுக்கீட்டின் அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பிற சமூகநீதி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரம், ஜார்க்கண்ட் போன்ற மேலும் பல மாநிலங்களிலும் சமூகநீதி சர்வேக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கவர்னர் உரை

தமிழ்நாட்டிலும் இத்தகைய சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த 46 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்; அது குறித்த அறிவிப்பை கவர்னர் உரையின் போது தமிழக அரசு வெளியிட வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி மற்றும் சமூகத் தலைவர்கள் சார்பில் தங்களிடம் வலியுறுத்துவதற்காகவே தங்களை நேரில் சந்தித்து இந்த மனுவை வழங்குகிறேன்.

தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்பதில் தங்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தங்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக, ‘‘ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி சர்வே மேற்கொள்ளப்படும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

சமூகநீதி சர்வே

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியையும், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூகங்களின் கோரிக்கையையும் நிறைவேற்றும் வகையில் 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான அறிவிப்பை வரும் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிகழ்த்தப்படவிருக்கும் கவர்னர் உரையில் வெளியிடுவதுடன், அதற்கான அரசாணையையும் உடனடியாக பிறப்பித்து சமூகநீதி எனும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தங்களின் ஆட்சிக்காலத்தில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் அது தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், தங்களுக்கும் பெரும் பெருமை சேர்க்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.