சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
உணவகங்கள் மூடப்பட்டால் மோசமான சமூக, பொருளாதார விளைவுகள் ஏற்படும்: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன?
வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகளின் உணவகங்கள் வரை அனைத்து வகையான உணவகங்களும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது.
தேநீர்கடைகள், சிற்றுண்டிகள், உணவகங்கள் போன்றவை தனித்த வணிகங்கள் அல்ல. உணவகங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் கொள்முதல், உணவு வகைகள் தயாரிக்கப்பட்ட பிறகு அவற்றை பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்தல் என மிகப்பெரிய கொள்முதல் மற்றும் வினியோகச் சங்கிலியை உணவகங்கள் கொண்டுள்ளன. அவை மூடப்பட்டால் மூலப்பொருள்கள் கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் மட்டுமின்றி, உணவகப் பணியாளர்கள், உணவகங்களை சார்ந்துள்ள சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும்.
அதுமட்டுமின்றி பணி நிமித்தமாக வீடுகளை விட்டு வெளியில் செல்லும் அடித்தட்டு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உணவு கிடைக்காத நிலை உருவாகும். ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அம்மா உணவகங்களைக் கூட மூட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் மிக மோசமான சமூக, பொருளாதார விளைவுகள் ஏற்படக்கூடும். அதைத் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.
பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி, வினியோகம் ஆகியவை மத்தியப் பட்டியலில் 53-ஆம் இடத்தில் இருப்பதால், அதில் மாநில அரசு அதன் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஆனால், அதன் விளைவாக தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தடுக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு தான் உள்ளது. அந்த வகையில் நிலைமையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது. இதற்காக திமுக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.
வணிக சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் நாம் நினைத்துப் பார்ப்பதை விட மிக மோசமாக இருக்கும். எனவே, நாடகங்களை நடத்துவது, விளம்பரப் படங்களில் நடிப்பது போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, தில்லி சென்று மத்திய அரசுடன் நேரடியாக பேச்சு நடத்தி தமிழ்நாட்டுக்கு வணிக எரிவாயு உருளைகளை பெறுவது, தனியார் நிறுவனங்கள் மூலம் எரிவாயு உருளைகளை பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இன்னொருபுறம் திமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்த திமுக, ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு தமிழக அரசு ரூ.100 மானியம் வழங்க வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.