சென்னை,
தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அதில் தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சாசன திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு 3-ல் 2 பங்கு உறுப்பினர்க ளின் ஆதரவு தேவை.
இதனால் இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் தி.மு.க. (22 எம்.பி.க்கள்) மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (8), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (4) கட்சிகளின் ஆதரவு இந்த முறை ஆளும் கூட்டணிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தொகுதி மறுவரையறை குறித்த மசோதாவை நிறைவேற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசு திமுகவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டின் நலன் மற்றும் தென் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். யூகங்களுக்கு இடம் தராமல் தொகுதி மறுவரையறை குறித்த தங்களது நிலைபாட்டை திமுக தலைமை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.