சென்னை,
இந்தியாவில் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்த பயன்படும் முக்கிய செயலியாக ஜிபே உள்ளது. இதனிடையே, ஜிபேவில் பாக்கெட் மணி என்ற புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதேவேளை, இந்த அம்சத்தை கிளிக் செய்தால் மொத்த பணமும் காலியாகிவிடும் என்று ஆடியோ பகிரப்பட்டு வருகிறது. இது ஒரு மோசடி என்றும் ஆடியோ பரவி வருகிறது. ஆனால், ஜிபே பாக்கெட் மணி அம்சம் எந்தவித மோசடியும் இல்லாத புதிய அம்சம் ஆகும். இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி ஜிபே பயனாளர்கள் வங்கி கணக்கில் இருந்து தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஜிபே பயனாளரின் பணத்தை பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.
ஜிபே பாக்கெட் மணி விளக்கம்:-
கூகுள் பே (ஜிபே)-யின் பாக்கெட் மணி அம்சம் ஒரு மோசடி அல்ல. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் செலவுகளைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் ஒரு அதிகாரப்பூர்வ அம்சமாகும். அதை கிளிக் செய்வதால் பணம் தானாகவே மறைந்துவிடாது. நீங்கள் நிர்ணயித்த அல்லது அங்கீகரித்த தொகையை மட்டுமே அது செலவழிக்கும்.
பாக்கெட் மணி ஜிபேயின் புதிய அம்சமான யுபிஐ சர்க்கிலின் ஐகான் ஆகும்.
யுபிஐ சர்க்கில் என்பது உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து உங்கள் வீட்டில் உள்ளவர்கள் (பிள்ளைகள் அல்லது முதியவர்கள்) பணம் செலவு செய்ய நீங்கள் தரும் ஒரு "டிஜிட்டல் அனுமதி" ஆகும். இதை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம்:
1. "கேட்டுவிட்டுச் செய்" (ஒவ்வொரு முறையும் அனுமதி)
உங்கள் பையன் ஒரு கடையில் ₹50-க்கு ஏதோ வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் கடையின் கியூஆர் கோடை ஸ்கேன் செய்வார். உடனே உங்கள் போனுக்கு "அனுமதிக்கலாமா?" என்று ஒரு மெசேஜ் வரும். நீங்கள் உங்கள் யுபிஐ கடவுச்சொல்லை (PIN) போட்டால் மட்டுமே அவர் போனில் இருந்து பணம் கழியும்.
2. பாக்கெட் மணி (மாதாந்திர கட்டுப்பாடு)
நீங்கள் (பயனாளர்) ஒருவருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் என்று லிமிட் செட் செய்துவிடலாம். அந்த ரூ. 2 ஆயிரம் முடியும் வரை அவர் உங்கள் வங்கில் கணக்கில் உள்ள பணத்தை யாரிடமும் கேட்காமல் தானாகவே ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம். அதற்கு மேல் போனால் உங்களால் மட்டுமே அனுமதிக்க முடியும்.
வங்கி கணக்கு தேவையில்லை:
உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்குத் தனி வங்கி கணக்கு இல்லையென்றாலும், உங்கள் கணக்கை வைத்தே அவர்கள் ஜிபே பயன்படுத்தலாம்.
முழு கட்டுப்பாடு:
அவர்கள் எங்கு, எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை உங்கள் போனில் இருந்தே பார்க்கலாம்.
பாதுகாப்பு:
எப்போது வேண்டுமானாலும் இந்த வசதியை நீங்கள் நிறுத்திவிடலாம்.
எப்படி ஆன் செய்வது?
ஜிபே ஓபன் செய்து உங்கள் ப்ரோபைல் (மேலே வலது பக்கம் இருக்கும் புகைப்படம்) கிளிக் செய்யவும். அதில் யுபிஐ சர்க்கில் என்பதைத் தேடி எடுக்கவும்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களின் செல்போன் நம்பரை சேர்த்து, அவருக்கு எவ்வளவு லிமிட் தரலாம் என்று முடிவு செய்து அழைப்பு (Invite) அனுப்பவும். அவர் தன் போனில் அதை அக்சப்ட் (Accept) செய்தால் இந்த அம்சரம் அமலுக்கு வரும். உங்கள் ஜிபே கணக்கில் இருந்து மற்றவர்கள் செலவு செய்ய நீங்கள் கொடுக்கும் டிஜிட்டல் பாக்கெட் மணியே இதுவாகும்.