சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத் தது அரசியலில் பெரும் திருப்பத்தையே ஏற்படுத்தியது. அதேபோல தேர்தல் முடிவுக்குபின் கூட்டணியில் அணிகள் மாறலும், அ.தி.மு.க.வில் 2 பிரிவினராக பிரிந்ததும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் ஒரு அணியினர் செயல்பட்டனர்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வில் 47 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றிருந்தனர். இதில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அ.தி.மு.க.வில் 2 பிரிவாக பிளவு ஏற்பட்டது உறுதியானது.
கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் 22 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வுக்கு எதிராக வாக்களித்தனர். அதே நேரத்தில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு கட்சியின் கொறடா நியமனம் மற்றும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டது தொடர்பாக நடவடிக்கை கோரி எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி தரப்பில் தனித்தனியாக மனு கொடுக்கப்பட்டது. இரு தரப்பில் அளிக்கப்பட்ட மனுக்கள் சபாநாய கரின் ஆய்வுக்கு உள்ளது.
இந்தநிலையில், அ.தி.மு.க.வில் திடீர் திருப்பமாக எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் மாறி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக இருந்த 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். பின்னர் அவர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்.
ராஜினாமா கடிதம் வழங்கிய கையோடு. அந்த 3 பேரும் அதே தலைமைச்செயலக வளாகத் தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்தனர். அவர்கள் அமைச்ச ருக்கு சால்வை அணிவித்து. தங்களை த.வெ.க.வில் இணைத்துக்கொண்டனர். அப்போது அவர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பொன்னாடை போர்த்தினார். சிறிது நேரம் அந்த அறையில் அவர்கள் பேசினார்கள்.
அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. அவர்கள் 3 பேரையும் பார்த்து, 'த.வெ.க. ஒரு குடும்பம். இந்த குடும்பத்தில் நீங்கள் இணைந்து இருக்கிறீர்கள். நாம் ஒன்றாக பயணிப் போம்' என்றார். அதனையடுத்து ராஜினாமா செய்த சத்யபாமா, 'ஆட்சி தொடங்கிய 15 நாட் களில் அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சியை பார்க்கிறோம்' என்று பெருமையோடு பேசினார்.
இது நடந்து கொண்டு இருக்கும்போதே. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த சத்யபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் ஆகியோரின் புகைப்ப டத்துடன் கூடிய த.வெ.க. உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுவிட்டது. அது சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது.
இன்று அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவின் 3 எம்.எல்.ஏக்கள் நேற்று ராஜினாமா செய்த நிலையில், தற்போது எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், அதிமுக கொறடாவாக இபிஎஸ் நியமித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த 5 நிமிடத்தில் அச்சிடப்பட்டு லேமினேஷன் செய்த தவெக உறுப்பினர் அட்டை வழங்கியது எப்படி ? இது என்ன தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த அரசு முன்வர வேண்டும். தலைமைச் செயலகத்திலேயே இணைப்பு விழாவையும் நடத்தி உள்ளனர். சிவிஎஸ், எஸ்பிவி ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கடிதம் கொடுத்துளோம். கட்சி தாவல் நடவடிக்கையை தவிர்க்கவே ராஜினாமா செய்துள்ளனர் என்றார்.