தமிழக செய்திகள்

அரசின் திட்டங்களை நிறைவேற்ற.. கட்சி நிர்வாகிகளுக்கு என்ன உரிமை உள்ளது? - வானதி சீனிவாசன்

தென்காசி தவெக மாவட்டச் செயலாளர் பேருந்து சேவையை தொடங்கி வைத்தது கண்டனத்திற்குரியது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

சென்னை,

அரசின் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரமில்லாத கட்சி நிர்வாகிகளுக்கு என்ன உரிமை உள்ளது? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தவெக-வினரின் தலையீடு

தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் -அம்பாசமுத்திரம் இடையேயான புதிய வழித்தட பேருந்து சேவையை, எந்த அரசுப் பதவியிலும் இல்லாத தென்காசி தவெக மாவட்டச் செயலாளர் இன்று தொடங்கி வைத்ததாகக் கூறப்படும் செய்தி கடும் கண்டனத்திற்குரியது.

மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் இருக்கும்போது, ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் அரசுப் பணிகளை மேற்கொள்வது விதிகளுக்கும், மக்களாட்சி மாண்புக்கும் எதிரானது. பள்ளிக் கல்வித்துறையைத் தொடர்ந்து தற்போது போக்குவரத்துத்துறையிலும் தவெக-வினரின் தலையீடு அதிகரிப்பது, அரசு எந்திரத்தை கரையான் போல அரிக்கும் செயல்.

என்ன உரிமை உள்ளது?

அரசின் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரமில்லாத கட்சி நிர்வாகிகளுக்கு என்ன உரிமை உள்ளது? இந்நிலை தொடர்ந்தால் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் தவெக மயமாகும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களுக்கு உடனடியாக தடைவிதித்து, அரசுத் திட்டங்கள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலமாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.