தமிழக செய்திகள்

சைபர் கிரைம் தொடர்பாக வங்கி கணக்கை முடக்கினால் செய்ய வேண்டியது என்ன..? - போலீசார் விளக்கம்

சைபர் மோசடி தொடர்பாக தினமும் குறைந்தது 15 புகார்கள் போலீஸ் நிலையத்துக்கு வருகின்றன.

சென்னை,

பகுதிநேர வேலை, ஆன்லைனில் முதலீடு, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக கூறி மோசடி நடைபெற்று வருகிறது. இதுதவிர சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் பேசி டிஜிட்டல் அரஸ்ட் என்று கூறி பணத்தை பெற்று மோசடி செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு சைபர் மோசடி தொடர்பாக தினமும் குறைந்தது 15 புகார்கள் வருகின்றன. இதற்கிடையே மோசடி நபர்களிடம் இருந்து யாராவது ஒருவரின் வங்கி கணக்குக்கு பணம் வந்தால் அந்த நபரின் வங்கி கணக்கு உடனடியாக முடக்கம் செய்யப்படுகிறது.

இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். சில நேரங்களில் மோசடி நபர்கள் அனுப்பிய தொகை மட்டும் முடக்கம் செய்யப்படுகிறது.

இதுபோன்று வங்கி கணக்கை முடக்கம் செய்தால் என்ன செய்வது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள், நேரடியாக நமது வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டியது இல்லை. யாரோ ஒருவரின் வங்கி கணக் குக்கு பணம் அனுப்பி, அந்த நபர் நமது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி இருந்தாலும் உடனடியாக முடக்கம் செய்கிறார்கள். மோசடி நபர்கள் அனுப்பும் பணத்தால் சில நேரங்களில் வங்கி கணக்கு முடக்கப்படுகிறது.

இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று, எதனால் கணக்கு முடக்கப்பட்டது என்று கேட்க வேண்டும். அவர்கள், எவ்வளவு பணம் வங்கி கணக்குக்கு வந்தது?. யாரிடம் இருந்து வந்தது. எந்த போலீசார் கணக்கை முடக்கம் செய்தனர் என்ற தகவலை வங்கி அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.

அந்த தகவலுடன் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு வந்தால், சம்பந்தப்பட்ட போலீசாரின் தொடர்பு எண், புகார்தாரரின் செல்போன் எண், மனு எண் ஆகியவற்றை கொடுப்போம். உடனே போலீசார் எண், மனுதாரரின் எண்ணில் பேசி தங்களுக்கு தொடர்பு இல்லை என்பதை தெரிவித்தால் வங்கி கணக்கை முடக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கி விடுவார்கள். இதுபோன்ற விஷயத்தில் சிக்காமல் இருக்க அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து நமது வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்ப சொல்லக்கூடாது.

குறிப்பாக தெரியாத நபர்கள் யாரிடமாவது இருந்து நமது வங்கி கணக் குக்கு பணம் வந்தால், உடனடியாக வங்கிக்கு சென்று, பணம் வந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். அந்த பணத்தை நமது வங்கி கணக் கில் இருந்து எடுக்க சொல்ல வேண்டும். இல்லை என்றால் மோசடி நபர்களிடம் இருந்து பணம் வந்து இருந்தால் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.