தமிழக செய்திகள்

தமிழக மக்கள் குறித்து கூறியது என்ன? -மதுரையில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை விளக்கம்

தமிழக மக்கள் குறித்து கூறியது பற்றி மதுரையில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தமிழக மக்கள் குறித்து கூறியது பற்றி மதுரையில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மதுரை வருகை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து மரியாதை அளித்தனர்.

பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மீனாட்சியை வணங்குவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. சமீபத்தில் இந்திய ஜனாதிபதி இங்கு வழிபாடு செய்திருந்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உலக தரத்தில் கட்டப்பட வேண்டிய ஒன்று. ஏற்கனவே, 50 மாணவர்கள் படிக்கும் நிலையில் கூடுதலாக மாணவர்கள் படிக்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்.

ஐதராபாத்தில்கூட எய்ம்ஸ் கட்டி முடிக்கும் வரை மாணவர்கள் தற்காலிகமாக வேறு கல்லூரியில் தான் படித்தார்கள். சென்னை, மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. ஆயுஷ்மான் திட்டம் போன்று யாரும் சிந்திக்காத திட்டங்களை எல்லாம் பிரதமர் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார். எய்ம்ஸ் விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என சொல்லும் கருத்து தவறானது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டி

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறும் கருத்துகள்பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். தமிழக மக்கள் பற்றி நான் குறைகூறவில்லை. பத்திரிக்கையாளர் ஒருவர் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கவர்னராக வருகிறார்கள், மத்திய மந்திரிகளாக யாரும் வருவதில்லை என கேட்டார். அந்த கேள்விக்குதான் பதில் கூறினேன். நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்வு செய்திருந்தால், மத்திய மந்திரியாகி இருப்போம். எங்களின் திறமை வீணாகிவிடக்கூடாது என்பதற்காக கவர்னர்களாக தேர்வு செய்திருக்கிறார்கள்.

சு.வெங்கடேசன்

தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவு தரவில்லை என்றுதான் சொன்னேனே தவிர, தமிழக மக்கள் குறித்து கூறவில்லை. நாங்கள் என்றும் தமிழக மக்கள் மீது பாசம் உள்ளவர்களாகதான் உள்ளோம். ஆனால் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், வெற்றி பெற முடியாதவர்களுக்கு டூட்டோரியல் கல்லூரியாக ராஜ்பவன் இருக்கிறது என கூறினார். அதற்குத்தான் நான் பதில் கூறினேன். டூட்டோரியல் கல்லூரியில் கூட படித்து வெற்றி பெறலாம். வெற்றி பெற்றவர்கள் எல்லாம் மீண்டும் வெற்றி பெற போகிறார்களா என்பது தெரியாது. தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் மீண்டும் வெற்றியடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. தேர்தலில் வெற்றி மட்டுமே உண்மையான அங்கீகாரம் கிடையாது. கவர்னராவது ஒன்றும் எளிதான விஷயம் அல்ல. அதுபோல், மேலும் ஒருவர், கவர்னர்களுக்கு பா.ஜ.க. பயிற்சி பட்டறையாக உள்ளது என கூறியுள்ளார். வாரிசுகள் உருவாகும் அரண்மனையாக இல்லாமல், அடிப்படை பயிற்சி பட்டறையாக பா.ஜ.க. இருப்பது நல்லதுதான்.

4 தமிழர்கள்

மாநிலங்களில் தகுதியின் அடிப்படையில் கவர்னர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால், அதனை எளிதாக ஏளனம் செய்கிறார்கள். 4 மாநிலங்களில் தமிழர்கள் கவர்னர்களாக இருப்பது தமிழர்களுக்கு பெருமையா இல்லையா..? என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.

பிரதமர் தமிழர்களுக்கு பெருமையை கொடுத்துள்ளார். அதனை நீங்கள் சிறுமையாக நினைக்க வேண்டாம். மிகப்பெரிய தலைவர்கள் கூட தேர்தலில் தோல்வியுற்று இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பெரிய தலைவர்கள் இல்லை, மக்கள் சேவை ஆற்றவில்லை என சொல்ல முடியாது. தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் தெலுங்கானாவில் செய்யும் சேவையை, புதுச்சேரியில் செய்யும் சேவையை தமிழகத்தில் செய்திருப்போம். சு.வெங்கடேசன் மற்றவர்களின் தகுதியை மதிக்க கற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

SCROLL FOR NEXT