சென்னை,
தமிழக சட்டசபையில் இன்று, கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டும் முடிவுக்கு எதிராக அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த இந்த தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட உறுப்பினர்கள் பேசினார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "முதல்-அமைச்சர் கொண்டுவந்துள்ள தனித் தீர்மானத்தில், மேகதாது பிரச்சினையில் தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பதை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்" என்றார். அவர் பேசி முடித்த சிறிது நேரத்தில், பதில் உரை வழங்கி பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "எதிர்க்கட்சி தலைவரால் அளிக்கப்பட்ட கருத்தினை 4-வது பத்திக்கு அடுத்து கூடுதலாக சேர்க்கலாம் என பேரவைத் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
அதன்படி, அரசினர் தனித்தீர்மானத்தில் 4-வது பத்திக்கு அடுத்து, "தமிழ்நாடு அரசின் 4.3.2026 தேதியிட்ட கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவா சட்டம், 1956 பிரிவு 4-ன் கீழ், புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. அதன்பிறகு, திருத்தப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.