தமிழக செய்திகள்

முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் விஜய்யின் முதல் கையெழுத்து என்ன..? பெண்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்..!

த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட தேர்தல் அறிக்கை அக்கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும்.

இதனிடையே த.வெ.க. தலைவர் விஜய், வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சூழலில் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கான நடவடிக்கைகளை த.வெ.க. தீவிரமாக எடுத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஒரு கட்சியின் வெற்றிக்கான கதாநாயகனாக எப்போதுமே அக்கட்சி வெளியிடும் தேர்தல் அறிக்கைதான் இருக்கும். அந்த வகையில் த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த தேர்தல் அறிக்கையும் அக்கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

அதன்படி, முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும், அந்த தேர்தல் அறிக்கையில் எந்த அறிவிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவருடைய முதல் கையெழுத்து இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

வங்கிக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.2,500

* ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் 60 வயது எட்டும் வரையில், அவர்க ளுடைய வங்கிக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 வரவு வைக்கப்படும்.

* ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

* மாநிலம் முழுவதும் இயங்கும் நகர, மாநகர, மாவட்டங்களுக்கு இடை யேயான அனைத்து அரசு பஸ்களிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் வெற்றிப்பயணம் திட்டம் செயல்படுத்தப்படும்.

* ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கமும், பட்டுச்சேலையும் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் மென்மையான துணி, டயப்பர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தாய்மாமன் சீர் பெட்டகம் வழங்கப்படும்.

* அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் தாயார், காப்பாளர் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் 2 தவணைகளில் வரவு வைக்கப்படும்.

5 லட்சம் புதிய வீடுகள்

* தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் சுத்தமான குடிநீர் வினியோகம் உறுதி செய்யப்படும்.

* கிராமப்புறங்களில் உள்ள ஏழை-எளிய மக்கள் சொந்தவீடு பெறும் வகையில் 5 லட்சம் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

* ரேஷன் பொருட்களில் எடைக்குறைவு. தரக்குறைவு, கலப்படம், கடத் தல் ஆகியவற்றை தடுத்து நியாயமான எடையில், தரமான பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் அரிசி தவிர்த்த மற்ற அனைத்து ரேஷன் பொருட்களும் பாக்கெட்டுகளாக வினியோகம் செய்யப்படும். 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும்.

* மத்திய அரசின் பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை (மருத்துவக்கல்வி உள்பட) மாநில பட்டியலுக்கு மாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எதற்கு முன்னுரிமை..?

* முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கப்படும். இதன் மூலம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு போதைப்பொருள் பயன்பாடு அறவே நீக்கப்படும்.

* நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும்.

* 2 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு கட்டணமில்லா உயர்கல்வி வழங்கப்படும்.

* 2 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு கட்டணமில்லா உயர்கல்வி வழங்கப்படும்.

* 2 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் உள்ளன.

பெரும்பாலும் மகளிர் எதிர்பார்க்கும் அறிவிப்புகளுக்கே விஜய் முன்னுரிமை அளிப்பார் என்பது கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அது ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 கொடுக்கப்படும் என்ற அறிவிப்பாகவோ, போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாகவோ இருக்கலாம் எனவும், ஏன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பெண்களுக்கான அதிரடி அறிவிப்பாகவோ கூட இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.