தூத்துக்குடி
மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு அதிகாரிகள் செயல்படுவது மக்களுக்கு பயனளிக்காது என கனிமொழி எம்.பி. பேசியுள்ளார்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், மழைக்காலத்தில் மழைநீர் விரைவாக கடலுக்கு செல்வதற்கு தேவையான பணிகள் என்னென்ன நடைபெற்று வருகின்றன? தண்ணீர் செல்லும் வழித்தடங்களில் ஏதேனும் அடைப்புகள் உள்ளனவா? அவற்றை சரி செய்ய தேவையான பணிகள் என்னென்ன? என்பதை கவனித்து வருகிறார் நம்முடைய மேயர். இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று வந்திருக்கிறேன்.
இதற்கு முன்னர், தூத்துக்குடியிலிருந்து மழைநீர் கடலுக்கு செல்வதற்கு 3 வழித்தடங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தி.மு.க. ஆட்சியில் இதுவரை தூத்துக்குடியிலிருந்து கடலுக்கு மழைநீர் செல்வதற்கான வழித்தடங்களின் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தியுள்ளோம். இவை அனைத்தும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. எனவே, எவ்வளவு மழை பெய்தாலும், மழைநீர் விரைவாக கடலுக்கு செல்லக்கூடிய வகையில் தேவையான ஏற்பாடுகள் கழக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல், கிட்டத்தட்ட ஏழு குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளன. மழைநீர் வடிவதற்கும், எதிர்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் ஏற்றவாறு, நீர்வளம் பாதுகாக்கப்படும் வகையில் அவற்றைச் சீரமைத்துள்ளோம். தூத்துக்குடியில் கடல்நீர் எளிதில் ஊடுருவி வரும் சூழல் உள்ளது. எனவே, இந்த ஏழு குளங்களும் சீரமைக்கப்பட்ட பிறகு, அவை மழைநீர் வடிகால்களாகவும் பயன்படும். மேலும், மழைக்காலத்திற்குப் பிறகு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் உதவும்.
அதேபோல, பக்கிள் ஓடையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஆகஸ்டு மாதத்தில் முழுமையாக முடிவடைந்து விடும். FCI கிடங்கு முன்பகுதியிலும் பக்கிள் ஓடை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கக்கூடிய சூழல் உள்ளது. FCI கிடங்கையும் உயர்த்தியுள்ளோம். தண்ணீர் உள்ளே புகாத வகையிலும், அங்குள்ள மூட்டைகள் பாதிக்கப்படாத வகையிலும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், தண்ணீர் தேங்காமல் வெளியேறக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே பக்கிள் ஓடை விரிவுப்படுத்தப்படுகிறது.
உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைக்காமல் இருப்பது மிகவும் தவறான செயலாகும். ஏனென்றால், அவர்கள் தொடர்ந்து மக்களோடு மக்களாக இருப்பவர்கள். அதிகாரிகள் இடமாற்றம் காரணமாக வருவார்கள், போவார்கள். அவர்களுக்கு தூத்துக்குடியை பற்றிய முழுமையான புரிதல் இருக்காது. எந்தப்பகுதியில் தண்ணீர் வரும், எந்தப்பகுதியில் உடைப்பை ஏற்படுத்தினால் தண்ணீர் வெளியேறும் என்பதெல்லாம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்குத்தான் நன்றாகத்தெரியும்.
நிச்சயமாக, அதிகாரிகளை விட நம்முடைய மேயருக்கும், மாவட்ட கழக செயலாளர் கீதா ஜீவன் அவர்களுக்கும் இந்த பகுதிகளை பற்றியும், மழைக்கால பிரச்சினைகளை பற்றியும் சரியான புரிதல் இருக்கும். ஏனென்றால், பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
ஆகையால், மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்துவிட்டு அதிகாரிகள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று நினைத்தால், அது நிச்சயமாக மக்களுக்கு பயனளிக்காது. யாருக்கும் பயப்படாமல், மக்கள் பிரதிநிதிகளும் மக்களுக்காக பணியாற்றுபவர்கள்தான் என்பதை புரிந்து கொண்டு, அவர்களுடன் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். சில அதிகாரிகள் ஆட்சி மாறிவிட்டது என்ற அச்சத்தில் மக்களுக்கு எதிராக செயல்பட்டு விடக்கூடாது.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது நிறைய பிரச்சினைகள் உள்ளன. பல வழக்குகள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. இதைவிட மோசமான வழக்குகளும் உள்ளன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுவும் இன்னொரு வழக்குதான். இதுதான் த.வெ.க. ஆட்சியின் லட்சணம். தூய ஆட்சி, தூய சக்தி என்றெல்லாம் சொல்லிவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரிகிறது என்றார்.