திருவாரூர்,
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில், ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கருப்புக்கிளார் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 61). இவர் சென்னை புரசைவாக்கம் முத்தையா செட்டியார் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டார். இவரது மனைவி விமலா, சென்னையில் மத்திய தொழிலாளர் பயிற்சி மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர்களுக்கு விக்னேஷ் என்கிற மகனும், யோகலட்சுமி என்கிற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில் விக்னேஷ் சென்னையிலும், யோகலட்சுமி ஒசூரிலும் வசித்து வருகிறார்கள்.
கோவிந்தராஜ், விமலா இருவரும் கடந்த 3-ந் தேதி ஒசூரில் உள்ள தங்களது மகளுக்கு தீபாவளி சீர் கொடுப்பதற்காக சென்றனர். அங்கு மகளுக்கு சீர் கொடுத்து விட்டு நேற்று காலை ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பகுதியில் உள்ள அனைத்து பூட்டுக்களும் உடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர்.
வீட்டுக்குள் அறை முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டு கிடந்தது. மேலும், அறையில் இருந்த இரும்பு பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த காசு மாலை, வளையல், நெக்லஸ் உள்பட 168.5 பவுன் நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தன.
கோவிந்தராஜ் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டதை நன்கு அறிந்த மர்ம கும்பல், சம்பவந்தன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று, தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மர்ம கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.