திண்டுக்கல்,
ஒரு மோசமான சூழ்நிலையில், சட்டப்பேரவை கேவலமாக நடந்துகொண்டு இருக்கிறது என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும் திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.பரமசிவம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்ட முடிவில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சட்டசபையில் நாங்கள் இருக்கும்போது ஜனநாயகம் இருந்தது. இப்போது 'ஜனநாயகன்' என்று பெயர் வைத்திருக்கிற நடிகர் கட்சியில் ஜனநாயகம் கிடையாது. சர்வாதிகாரம்தான் நடந்துகொண்டு இருக்கிறது
கேலிக்கூத்து நடக்கிறது. ஒரு மோசமான சூழ்நிலையில், சட்டசபை கேவலமாக நடந்துகொண்டு இருக்கிறது; ஒரு லட்சம் கோடி வெளிநாட்டு ஒப்பந்தங்கள் என்று ஏமாற்றுகிறார்கள்.
எம்.ஜி.ஆர் ஆட்சியை நாங்கதான் கொடுக்கிறோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுவதை விட வெட்கக்கேடு எதுவுமே இல்லை. நிதியமைச்சர் மரிய வில்சன் ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார். நான் இப்படித்தான் இருப்பேன் என்று திமிராக பேசுகிறார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிள்ளைகள் நாங்கள். எடப்பாடி தலைமையில் அதிமுக செயல்படுகிறது. அதிமுக ஆட்சிதான் நடக்கிறது என்றால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ராஜினாமா செய்துவிட்டு போய்விடலாம். இன்னும் 6 மாதம் நேரம் கொடுங்கள் என கேட்கலாம். அதை விட்டுவிட்டு எல்லாம் எங்களுக்கு தெரியும் என்பது மாதிரி பேசுவது தவறு.
நிதி இல்லன்னு தெரிஞ்சுதான் வாக்குறுதி கொடுக்குறாங்க. விவசாயிகள் வாழ்க்கையிலும் வயித்துலையும் அடிக்காதீங்க.வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்றுதான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம் அறிவித்தார்”
இவ்வாறு அவர் கூறினார்.