தமிழக செய்திகள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? - முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

இலாகா ஒதுக்கப்பட்ட 9 அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. மகத்தான வெற்றி பெற்று முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதனையடுத்து அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு நேற்று முன்தினம் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இலாகா ஒதுக்கப்பட்ட 9 அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் தங்களின் துறைகளில் எப்படி செயல்பட வேண்டும், அரசின் எதிர்பார்ப்பு ஆகியவை குறித்து முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தினார். முதல்-அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து கோடைகால விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறப்பு குறித்தும், நாளை மறுநாள் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.