தமிழக செய்திகள்

திருவல்லிகேணி போலீஸ் நிலையத்தில் செந்தில்பாலாஜி எப்போது ஆஜராவார்?

சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் மனு தாக்கல் செய்தனர்.

சென்னை,

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது கட்சியின் கொறடா உத்தரவை மீறி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ரூ.35 கோடி தருவதாக ஊத்தங்கரை த.வெ.க., எம்.எல்.ஏ., இளையராஜாவிடம் சிலர் குதிரைபேரம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநாவுகரசு உள்பட 9 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரை வழக்கில் குற்றவாளியாக சேர்த்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இவர்கள் இருக்கும் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், இந்த உத்தரவு நகல் கிடைக்க பெற்று 15 நாட்களுக்குள் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் ஆஜராகி, ரூ.25 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் உத்தரவாதத்தை செந்தில்பாலாஜியும், அசோக்குமாரும் வழங்கவேண்டும்.

அதன்பின்னர் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 15 நாட்கள் ஐகோர்ட்டு அவகாசம் வழங்கியுள்ளதால், அந்த அவகாசத்துக்குள் செந்தில்பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது.