தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. இதில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கடும் பின்னடைவை சந்தித்து, 47 இடங்களை மட்டுமே வென்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அ.தி.மு.க. இழந்ததால், கட்சியில் கடும் அதிர்வலை ஏற்பட்டது.
மேலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டதும், சி.வி. சண்முகம் தனியாக ஆலோசனை நடத்தியதும் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் மற்றொரு குழுவாகவும் கடந்த இரு தினங்களாக பரபரப்பான ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், சட்டமன்றத்திற்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இரு குழுக்களாகவே வந்தனர். அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு நிலவுவதை அப்பட்டமாக இந்த நிகழ்வு காட்டிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் மனு அளித்தனர்.
இதற்கிடையே, எம்.ஆர்.சி. நகரில் உள்ள வீட்டில் சி.வி. சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, சி.வி. சண்முகத்திடம் “மோதல் எப்போது முடிவுக்கு வரும்?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறினார்.