மதுரை,
மதுரையை சேர்ந்த நவீன்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் தனியார் டிஜிட்டல் மைய பைக் டாக்சி சேவைகள் அதிகரித்து வருகின்றன. இவை பலருக்கும் பயன் அளிக்கக்கூடிய வகையில் உள்ளன. ஆனால் இந்த சேவைகளை ஒழுங்குபடுத்த அரசிடம் திட்டமோ, விதிகளோ தமிழகத்தில் இல்லை.
ஆட்டோ, வாடகை கார்களை போல பைக் டாக்சி சேவை தனித்து இயங்க முடியாது. அவை முழுமையாக சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனங்களை சார்ந்து உள்ளன. ஆனால் அந்த நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தங்கள் டிஜிட்டல் தளத்தை இயக்கி வருகின்றன.
அதேசமயம் பைக் டாக்சி டிரைவர்கள் மீது அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்ற வழக்குகள் பதிவது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமாக டிரைவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். எனவே பைக் டாக்சி ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கவும், சட்டப்படி உரிமம் வழங்கி பைக் டாக்சி சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை பைக் டாக்சி டிரைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில்மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.