தமிழக செய்திகள்

அரிச்சல்முனைக்கு சிறப்பு பஸ்கள் எப்போது இயக்கம்? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு!

இதற்காக புதிதாக 8 சிறப்பு பஸ்கள் வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ராமேசுவரம்,

ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் இடங்களில் தனுஷ்கோடி அரிச்சல்முனையும் ஒன்றாகும். இங்கு சுற்றுலா வாகனங்களின் வருகை அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், கடற்கரை மற்றும் கடல் பகுதிகளும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் மாசடைந்து வருகின்றன. இதனைத் தடுக்க வனத்துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு

இந்தியாவின் முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்று இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.

தனுஷ்கோடிக்கு அரசு பஸ்கள் மட்டுமின்றி கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்பவர்களில் சிலர் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட குப்பைகளை கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் வீசிச் செல்கின்றனர். இதனால் கடற்கரை மாசடைவதுடன், கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.

மேலும், சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரிச்சல்முனை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

8 புதிய சிறப்பு பஸ்கள்

இதனை கருத்தில் கொண்டு தனுஷ்கோடி கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை பாதுகாக்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் புதிய திட்டம் வகுக்கப்பட்டது.

அதன்படி, தனுஷ்கோடி செல்லும் அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா வாகனங்களும் கம்பிப்பாடு கடற்கரை பகுதி வரை மட்டுமே செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது. அங்கிருந்து சுற்றுலா பயணிகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வனத்துறையின் சிறப்பு பஸ்களில் அரிச்சல்முனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதற்காக புதிதாக 8 சிறப்பு பஸ்கள் வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த பஸ்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

விரைவில் இயக்கப்படும்

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சிறப்பு பஸ்களில் தலா 32 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தாலும் தனுஷ்கோடிக்கு மற்ற வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்படாது.

அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா வாகனங்களும் வழக்கம்போல் கம்பிப்பாடு பகுதி வரை செல்லலாம். அங்கிருந்து வனத்துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.

எனவே, தயார் நிலையில் உள்ள 8 சிறப்பு பஸ்களையும் விரைவில் இயக்க மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT