விஜய்யின் தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், "தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம்?" என்று மக்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பாஜகவின் "ஜெராக்ஸ்" போல செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.தவெக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த மு.க. ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தார்.
"கான்பிடெண்டா இருங்க" என மக்களிடம் கூறும் விஜய்க்கே தனது ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் என்றும் அவர் விமர்சித்தார். கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் விஜய் டெல்லி சென்றாரா என்றும் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், பொறுப்பான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துக்காட்டும் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். சென்னையில் நடைபெற்ற திமுக மகளிரணி கூட்டத்தில் இந்த விமர்சனத்தை மு.க.ஸ்டாலின் வைத்தார்.
முக. ஸ்டாலின் மேலும் கூறுகையில், திமுக ஆட்சியில் மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை செய்து கொடுத்தோம். தவெக ஆட்சியில் நாள்தோறும் குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் தவெக ஆட்சியை மக்கள் கவிழ்ப்பார்கள். தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருந்துகிறார்கள். ஆளும் கட்சியை சேர்ந்த பெண்ணுக்கே பாலியல் கொடுமை நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெக நிர்வாகிகள் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன” என்றார்.