சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சுவாமிமலை திருக்கோவிலில், மின்தூக்கி அமைப்பதில் நடந்திருக்கும் ஊழல் குறித்து, அமைச்சர் சேகர்பாபு புதுவிதமான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சுவாமிமலை திருக்கோவிலில் மின்தூக்கி அமைக்கிறோம் என்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த அமைச்சர் சேகர்பாபு, தற்போது பல்டி அடித்து, உபயதாரர்கள் நிதி என்று முதன்முறையாக கூறியிருக்கிறார்.
கடந்த 2025-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சட்டசபையில் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த மின்தூக்கிகள் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியிருந்த நிலையில், எப்படி இரண்டு ஆண்டு காலமானது என்ற கேள்வி ஒருபுறம்.
ஒரு மின்தூக்கி 20 பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், எப்போது அது 13 பேர் என்றானது? அதுமட்டுமின்றி, நேற்றைய தினம், அதிக எடை என்ற காரணத்தால், மின்தூக்கி செயல்படாமல் நின்றபோது, அதில் 10 பேர் கூட இல்லையே?
சரி அமைச்சர் கூறியிருப்பதைப் போல, கடந்த இரண்டு ஆண்டுகளில், உபயதாரர்கள் வழங்கிய ரூ.2,000 கோடி நிதியில், திமுக அரசு செய்த 12,200 திருப்பணிகள் எவை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நிதியில் செலவிட்ட திருப்பணிகள் எவை என்ற பட்டியல் வழங்கத் தயாரா? கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த திருப்பணிகள் அனைத்துமே உபயதாரர்கள் நிதியில்தான் நடந்தது என்றால், கோவில்களின் நிதி, சொத்துகள், உருக்கிய தங்கம் அனைத்தும் எங்கே சென்றது?
இறுதியாக, மின்தூக்கி இயக்குபவரின் முதுகில் அறைந்ததை, தட்டிக் கொடுத்தேன் என்கிறார் அமைச்சர் சேகர்பாபு. இப்படித்தான் ஒரு முறை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரெயிலில் ஒரு இளைஞரின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்ததாகக் கூறினார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கோரிக்கை மனு கொடுத்த ஒரு ஏழைத்தாயின் தலையில் அடித்தார். அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.