கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தவெக ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு எங்கே? - நயினார் நாகேந்திரன் கேள்வி

போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே, பட்டப்பகலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் மீது 15 பேர் கொண்ட போதை கும்பல் பட்டாக்கத்திகளால் சரமாரியாக வெட்டி வெறியாட்டம் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களும் வியாபாரிகளும் அதிகம் கூடும் சென்னை மாநகரின் மையப்பகுதியிலேயே அரங்கேறியுள்ள இந்தத் தாக்குதலால், மக்கள் தங்களின் உயிருக்கு அஞ்சி அலறியடித்து ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தையும் வன்முறையையும் கட்டுப்படுத்தத் தவறிய தவெக அரசின் நிர்வாகத் தோல்வியே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமாகும்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள அந்த 15 பேர் கொண்ட வன்முறைக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். கல்லூரி வளாகங்கள், ரெயில் மற்றும் மெட்ரோ நிலையங்களில் நிரந்தரப் பாதுகாப்பு அளிப்பதோடு, போதைப்பொருள் புழக்கத்தையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், தவெக அரசுக்கு எதிராகப் பா.ஜ.க சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.