தமிழக செய்திகள்

இலவச தட்கல் மின்இணைப்புக்கு வசூலித்த ரூ.2,431 கோடி எங்கே? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

2021-22-ம் ஆண்டு முதல் தட்கல் திட்டத்தின் கீழ் 89,289 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மதுரை,

தமிழக அரசு விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், 2025-26-ம் நிதியாண்டில் இந்த மானியத்தொகை ரூ.7,280 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், 2026-27-ம் ஆண்டு ரூ.7,431 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, சாதாரண முறையில் காத்திருக்கும் ஏழை விவசாயிக ளுக்கு இணைப்பு வழங்கப்படாமல், 'தட்கல்' முறையில் பணத்தை செலுத்துவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வக்கீல் செல்வகுமார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மேலும், அந்த மனுவில், 2021-22-ம் ஆண்டு முதல் தட்கல் திட்டத்தின் கீழ் 89,289 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.2,431 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 44,296 பேர் இன்னும் இணைப்புக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வசூலிக்கப்பட்ட இந்தத் தொகை எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து சிறப்பு தணிக்கை நடத்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "தட்கல் முறையினால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்களா?" என எழுப்பிய கேள்வியுடன், இந்தத் தொகை எதன் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது மற்றும் அதற்கான தணிக்கை விவரங்கள் என்ன என்பது குறித்து மின்சார மற்றும் நிதித்துறை அதிகாரிகள் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT