எடப்பாடி,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்புமனுதாக்கல் செய்த அருண்குமாரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளரை காணாததால் வட்டாட்சியர் அலுவலகத்தை தவெக தொண்டர்கள் முற்றுகையிட்டு கூச்சலிட்டு வருகின்றனர்.
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக, திமுக தவெக, நாம் தமிழர் கட்சி என 30-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பாளர்களுக்கான பரிசீலணையானது இன்று காலை முதல் நடந்து வருகிறது. வேட்புமனுதாக்கல் செய்த அனைத்து நபர்களும் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் தவெக சார்பில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்த அருண்குமாரும் வந்திருந்தார். திடீரென அவர் காணாமல் போய்விட்டார்.
இதன்பின்பு அருண்குமார் தவெக தொண்டர் ஒருவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்படும் நிலை உள்ளதால் நான் வெளியே செல்கிறேன் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு தரப்பினர் அருண்குமார் கடத்தப்பட்டு விட்டதாகவும், விலை போய்விட்டார் என்றும் தெரிவித்து வருகின்றனர். தவெக தொண்டர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் எடப்பாடி போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். வேட்புமனு மீதான பரிசீலனையின் போது வேட்பாளர் காணாமல் போயிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.