தமிழக செய்திகள்

மாயமான செஞ்சி சிறுமி எங்கே..? - செங்கல்சூளையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

சிறுமி காணாமல் போன வழக்கை 9வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்,

செஞ்சி சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக செங்கல்சூளையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி மாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு- பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி. கடந்த 11-ந் தேதி மாலையில் தனது பிறந்த நாளை கொண்டாடி முடித்து விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலை வேளையில் அவள் திடீரென காணவில்லை.

சிறுமி மாயமானது குறித்து உள்ளூர் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியபோதிலும் எந்தவித துப்பும் துலங்காததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த வழக்கை கையில் எடுத்து இன்றுடன் 9 நாட்கள் ஆகிறது. சிறுமி மாயமாகி நேற்றுடன் 18 நாட்கள் நிறைவடைந்து விட்டது. இருப்பினும் இதுநாள் வரையிலும் சிறுமியை பற்றி எந்தவித தடயமும் சிக்கவில்லை.

9-வது நாளாக..

இவர்களின் விசாரணை 9-வது நாளாக இன்றும் தொடர்கிறது. நேற்று சிறுமியின் வீட்டிலேயே அவரது தாய் பவானி, தந்தை வடிவேலு, பாட்டி சாந்தி, சகோதரி விஜயலட்சுமி ஆகியோரிடம் தனித்தனியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதுபோல் சிறுமியின் உறவினர்கள், கிராம மக்கள் என பலரையும் போலீசார் தனித்தனியாக வரவழைத்து அவர்களிடமும் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் திருப்புமுனையாக அமையக்கூடிய புதிய தகவல் ஒன்று கிடைத்தது. அதாவது சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், வயல்வெளியில் தனியாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் மணிமேகலை (75) என்ற மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்

இதன் அடிப்படையில் சிறுமி காணாமல் போன அன்று அதிகாலை நேரத்தில், அப்பகுதியில் யாரோ மர்ம நபர் நடமாடியிருப்பது தெரியவந்துள்ளது. இது இவ்வழக்கில் முக்கிய தடயமாக இருக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதுகின்றனர். அந்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்றும், அவர் கொள்ளை கும்பலை சேர்ந்தவரா, சிறுமி மாயமான சம்பவத்திற்கும். அந்த நபருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த புதிய தகவலின் அடிப்படையில், சிறுமி மாயமான நாளில் அதிகாலை வேளையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நபர்கள் யார்? மூதாட்டி மணிமேகலையின் வீட்டு கதவை தட்டியது யார்? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தனர்.

செங்கல்சூளையில்..

இந்நிலையில் மாயமான செஞ்சி சிறுமியின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள செங்கல்சூளையில் தொழிலாளர்கள் 5 பேரிடம் சந்தேகத்தின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT